கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் கடந்த திமுக ஆட்சியின் போது 57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் காத்திருக்கும் 300 படுக்கைகள் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடத்தினை திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி பார்வையிட்டார். அப்போது பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் சிறு சிறு நோய்களுக்கு வந்தால் கூட திருவண்ணாமலை விழுப்புரம் போன்ற இடங்களுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விடுகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதே கிடையாது என குற்றச்சாட்டு வைத்தனர்.
சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது ஏன்? சட்டமன்ற உறுப்பினர் கேள்வி.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்களிடம் கேட்டபோது போதிய படுக்கை வசதிகள் இல்லை, 40 படுகைகள் தான் உள்ளது. 75 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் 143 பிரசவம் நடைபெற்றது. இந்த மாதம் இதுவரை 130 பிரசவம் நடந்துள்ளது. குழந்தை பெற்ற பின்னர் தாய்மார்களை தரையில் பாய்களில் படுக்க வைக்க கூடிய நிலை இருந்து வருகிறது. எனவே உடனடியாக புதிய மருத்துவ கட்டிடம் திறக்கப்பட்டால் இந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்றார்.
பின்னர் சட்டமன்ற உறுப்பினர் நீண்ட நாட்களாக டயாலிசிஸ் செய்வதற்கு தனியார் மருத்துவமனையும் வெளி மாவட்டத்திற்கும் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது என்று மருத்துவரிடம் கேள்வி எழுப்பினார். புதிய மருத்துவமனை திறக்கப்பட்டவுடன் இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என தெரிவித்தார். அதன் பின்னர் மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை என மருத்துவர் சட்டமன்ற உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து உடனடியாக நகராட்சி ஆணையாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் பழனிச்சாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக குடி தண்ணீர் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.
